சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏன் நிதி ஒதுக்கப்படவில்லை? மத்திய அரசு விளக்கம்
சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெறும் வரும் நிலையில், இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்பதை மத்திய அரசே தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை தொடர்ந்து 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. மாநில - மத்திய அரசுகளும் கூட்டு பணிகளான இந்த மெட்ரோவிற்கு இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தொடர்ந்து தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இது தொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அவருடைய கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறையின் இணையமைச்சர் தொகன் சாஹூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருக்கிறார்.
ஒதுக்கவில்லை
அந்த பதிலில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி- காசியாபாத்- மீரட் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.43,431 கோடியும், பெங்களூருவிற்கு ரூ.7,658 கோடியும், மும்பைக்கு ரூ.4,402 கோடியம் நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரை பொறுத்தவரை, சுமார் 118.9 கிலோமீட்டருக்கு ரூ.63,246 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருப்பதாக தொகன் சாஹூ குறிப்பிட்டு, இது போன்ற செலவு மிகுந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது சாத்தியக்கூறுகள், மூலப்பொருட்கள் கிடைக்கும் அளவு போன்றவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது மாநில அரசின் திட்டம் எனவும், இத்திட்டத்துக்கான மொத்த செலவும் தமிழ்நாடு அரசுடையது என்றும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.