இந்திய அணி இனி வங்கதேசம் செல்லாது? பிசிசிஐக்கு மத்திய அரசு அறிவுரை
வங்கதேசத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Ind-Bang
அடுத்த ஆண்டு டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அதனையொட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்று விளையாடவுள்ளது.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பி வைக்க வேண்டாம் என்று மத்திய அரசு சார்பில் பிசிசிஐக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி தொடர்கள் ரத்தாக வாய்ப்புள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையே கடந்த ஆண்டு வரை நல்ல உறவு இருந்தது. அங்கு மாணவர்கள் போராட்டம் வெடித்த நிலையில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
அரசு அறிவுரை
இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இவர் நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் ஏர்போர்ட், துறைமுகங்களில் இருந்து வங்கதேச சரக்குகளை பிற நாடுகளுக்கு அனுப்ப வழங்கப்பட்ட அனுமதியையும், சாலை மார்க்கமாக துணி உள்ளிட்ட ஜவுளி வகைகளை நம் நாட்டுக்கு கொண்டு வரும் அனுமதியையும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பாதுகாப்பு கருதி வங்கதேச சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தெரியவருகிறது.