உலகை உலுக்கும் கொரோனா: சீனா கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும் - WHO அதிரடி!
சீனா கொரோனா பாதிப்பு குறித்து விளக்க அளிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனா, ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா நாடு முழுவதும் பரவி ஒரு ஆட்டம் காட்டியது. அந்த வைரஸ் அண்டை நாடுகளுக்கும் பரவி உலகையே நடுங்க வைத்தது. தொடர்ந்து, கொரோனா தொற்றின் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்ததால், உலக நாடுகளின் பெரும்பாலானவை கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின.

ஆனால், அப்போதும் சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள், லாக்டவுன், தடைகள், பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. ஆனால், தற்போது உலகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நாடுகளில் பல, கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில் சீனா மட்டும் தடைகளை அகற்றி வருகிறது.
WHO வலியுறுத்தல்
மேலும் இனி கொரோனா பதிவுகளை வெளியிடப்போவதில்லை எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதனையடுத்து, இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சீனாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும், பாதிப்புகளும் மோசமடைந்து வருவதாக தகவல் வருகின்றன. இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. தங்கள் நாட்டில் வைரஸ் பரவல் எப்படி இருக்கிறது, எப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்குகிறது என சீனா இதுவரை கூறவில்லை.
இதுகுறித்து அந்நாடு விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான், மற்ற நாடுகள் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். சீனாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு பல நாடுகள் கட்டுப்பாடு விதித்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.