முன்னாள் மாவோயிஸ்ட்..!! தற்போது தெலுங்கானா அமைச்சர்..!! யார் இந்த சீதாக்கா..?
நடைபெற்று முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ'வாக வெற்றிபெற்றுள்ளார் சீதாக்கா.
சீதாக்கா
119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் 64 தொகுதியை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததுள்ளது. ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதலமைச்சராக தேர்வு செய்யபட்டார்.
நேற்று அவருடன் சேர்ந்து 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதில் பெரும் தலைப்பு செய்தியாக மாறியவர் சீதாக்கா. பதவிப்பிரமாணம் செய்ய வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மூன்று முறை முயன்றும் மக்களின் கரகோஷத்தில் அரங்கத்தையே அதிர செய்தார் சீதாக்கா. அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், தெலுங்கானா தவிர மற்ற மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கு யார் இந்த சீதாக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யார் இந்த சீதாக்கா.?
ஆந்திரபிரதேசத்தில் முலுகு மாவட்டத்துக்கு அடுத்து உள்ள ஜகன்னபேட்டாவில் ஆதிவாசி குட்டி கோயா என்ற குடும்பத்தில் சாரையா மற்றும் சாராக்க தம்பதிக்கு மகளாக பிறந்தவர்தான் தான்சாரி அனுசுயா என்ற சீதக்கா. தனது குடும்பத்தில் இளம் குழந்தையான சீதக்கா 14 வயதில் நக்சலைட் அமைப்பில் இணைந்தார்.
1980-களில் மாவோயிஸ்ட்யை சார்ந்தவர்களின் கருத்தியலால் ஈர்க்கப்பட்ட இவர், அதன் காரணமாக நில உரிமையாளர்களை எதிர்த்து சண்டையிட்டதனால் அமைப்பின் மூலம் கவனம் பெற்றார். 1997-ல் பொது மன்னிப்புத் திட்டத்தின்கீழ் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த சீதாக்கா, பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்றங்களில் வாதாட பாதலா ராம் ரெட்டி சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
வாரங்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கி, பின்னர் 2004-ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். முலுகு தொகுதியில் (தனித்தொகுதி) போட்டியிட்ட அவர் முதல் தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர், 2009-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று MLA-வாக முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 2014-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திரா, இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, தெலங்கானாவில் அதே முலுகு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதனை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்த சீதாக்கா, 2018 மற்றும் தற்போது (2023) சட்டமன்றத்தில் அடியெடுத்துவைத்துள்ளார்.
ஆனால், இம்முறை அமைச்சராக. ஆம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மாவோயிஸ்டாக மாறிய சீதாக்கா தற்போது பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பதிவியேற்று கொண்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், பெரிய பெரிய இன்னல்களை சந்தித்த போதிலும் தன்னுடைய கொள்கையில் தொடர்ந்து பயணித்து வரும் சீதாக்கா போன்றோர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் பலரும் விரும்புகின்றனர்.