கொடிய கண் நோயை முற்றிலுமாக ஒழித்த இந்தியா - உலக சுகாதார நிறுவனம் விருது
டிராக்கோமா என்னும் கண் நோயை ஒழித்ததற்காக இந்தியாவுக்கு WHO விருது அளித்துள்ளது.
டிராக்கோமா
டிராக்கோமா என்பது கண்களைப் பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது கிளமிடியா டிராக்கோமாடிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள், கண் இமைகள், மூக்கு அல்லது தொண்டை சுரப்புகளின் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. சரியான சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கண் பார்வை இழப்பை ஏற்படுத்தி விடும்.
இந்தியாவில் டிராக்கோமா
உலகம் முழுவதும் 150 மில்லியன் மக்கள் ட்ரக்கோமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 1950-60 காலகட்டத்தில் நாட்டில் பார்வை இழப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக டிராக்கோமா இருந்தது.
இதனையடுத்து, இந்திய அரசாங்கம் 1963 ஆம் ஆண்டில் தேசிய டிராக்கோமா கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பின் 2005 ஆம் ஆண்டில், ட்ரக்கோமாவால் 4% ஆக இருந்த பார்வை இழப்பு, 2018 ல் 0.008% ஆக குறைந்தது.
இதன் பின் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ட்ரக்கோமா குறித்து கண்காணிப்பு தொடர்ந்தது. இது தொடர்பான அறிக்கையை உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பிய பின், இந்தியா டிராக்கோமாவை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக நீக்கிவிட்டதாக WHO அறிவித்தது.
19 வது நாடு இந்தியா
இது குறித்து பேசிய, இந்தியாவின் WHO பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ எச். ஆஃப்ரின், "பொது சுகாதாரப் பிரச்சனையாக ட்ரக்கோமாவை நீக்குவதற்கான சான்றிதழைப் பெற்றதற்கு இந்தியாவுக்கு வாழ்த்துகள்! இந்த மைல்கல் வலுவான தலைமை மற்றும் தேசிய மற்றும் மாநில அளவில் டிராக்கோமாவை நிவர்த்தி செய்வதில் பல வருட முயற்சிகளின் விளைவாகும்.
India receives a citation from @WHOSEARO at the ongoing 77th Regional Conference for eliminating Trachoma as a public health problem.
— Ministry of Health (@MoHFW_INDIA) October 8, 2024
The award was received by Smt. Aradhana Patnaik, AS & MD (NHM), Ministry of Health & Family Welfare.
A significant milestone, this reaffirms… pic.twitter.com/QihGPn4R0i
ட்ரக்கோமாவை அகற்றவும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் பாடுபடும் பிற நாடுகளுக்கு இந்தியாவின் வெற்றி ஒரு உத்வேகமாக உள்ளது” என்று கூறினார்.
உலகளவில், ட்ரக்கோமாவை பொது சுகாதாரப் பிரச்சனையாக நீக்கியதற்காக WHO ஆல் சரிபார்க்கப்பட்ட 19 நாடுகளில் இந்தியா இணைந்துள்ளது.