உத்திரபிரதேசத்தில் அரசியலில் கை ஓங்குமா..? தாமரை மலருமா..?
உத்திரபிரதேச மாநிலம் தான் எப்போதும் பொதுத்தேர்தலின் போது முக்கிய இடத்தை பிடிக்கும்.
உத்திரபிரதேச அரசியல்
உத்திரபிரதேச மாநில தேர்தலை வென்றுவிட்டால், கிட்டத்தட்ட தேசிய அரசியலை கைப்பற்றிவிடலாம் என்ற அளவிற்கு 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது என்ற காரணத்தால், பெரும்பாலான தேசிய கட்சிகள் இந்த மாநிலத்தை குறிவைப்பார்கள்.
தற்போது பெரும் எழுச்சியாக அம்மாநிலத்தில் உள்ளது பாஜக கட்சி. இந்துத்துவ அரசியலை மிக தீவிரமாக எடுத்து வரும் பாஜகவிற்கு அம்மாநிலம் தற்போது வரை பெரும் பயனை தான் திருப்பியளித்துள்ளது.
இம்முறை சமாஜ்வாதி கட்சியுடன் கைகோர்த்துள்ள காங்கிரஸ் கட்சி பெரும் சவாலை பாஜகவிற்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தமுள்ள 80-இல் 17 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கும், 63 இடத்தை மாநில கூட்டணி கட்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது சமாஜ்வாதி.
இது இந்தியா கூட்டணிக்கு சற்று ஊக்கத்தை அளிக்கும் என்ற போதிலும், உத்திர பிரதேசத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் பாஜகவிற்கு பெரும் உதவியாகவே அமையும்.
இன்னும் அம்மாநிலத்தில், இந்துத்துவ கொள்கை - சிந்தனை மக்களிடம் அதிகமாக இருக்கும் நிலையிலும், 79.7% மக்கள் இந்துக்களே என்ற காரணத்தினால் பாஜகவின் கை இம்முறையும் சற்று ஓங்கி தான் இருக்கும் என கணிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
கடந்த முறை பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ்ஜிடம் தோல்வியுற்ற அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி களம் இறங்குவாரா..? ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா.? என்ற செய்திகள் எல்லாம் பேசப்பட்டு வருகின்றது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் மொத்த வாக்கு சதவீதம் 6.31 % மட்டுமே. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் 17.96% தான். ஆனால், இவை இரண்டையும் சேர்த்து வருவதை விட கடந்த தேர்தலில் பாஜக 49.56% வாக்குகளை பெற்று மலைக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் மீதான அதிருப்திகளை குறிவைத்து களம் காணும் இந்தியா கூட்டணியின் முடிவு என்ன என்பது தேர்தல் முடியும் போது தான் தெரியும்.