4 ஆயிரம் கோடி கடலுக்குள் போய்விட்டதா..? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சரமாரி கேள்வி!!
சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கடும் இன்னலை சந்தித்து வரும் நிலையில் பலரும் அதற்கு ஆளும் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.
சென்னை மழை வெள்ளம்
தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த மழையில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு இயல்வு நிலை திரும்ப அரசு மீட்புப்பணிகளை முடக்கிவிட்டுள்ள நிலையில், பலதரப்பில் இருந்தும் ஆளும் திமுக அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது.
அந்த வரிசையில், தற்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இணைந்துள்ளார். மதுரை மாவட்ட பரவை அதிமுகவினர் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, புயல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 4 நாட்கள் ஆன பிறகும் வெள்ளம் பல்வேறு இடங்களிலும் வடியாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, இதுதான் திராவிட மடலா ? என்று கேள்வி எழுப்பினார்.
4 ஆயிரம் கோடி என்னவானது?
இந்த திராவிட மாடலை தான் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சொல்லினார்களா? என்றும் அமைச்சர்கள் வாய்கிழிய பேசினார்களே, ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பது என்ன என சரமாரியாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வெள்ளம் ஏற்பட்டது குறித்தும் அதற்கு முன்னதாக செலவு செய்திருந்தது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ரூ.4000 கோடி பணம் என்னானது? என்றும் கடலுக்குள் போய்விட்டதா என்று தெரியவில்லை என விமர்சனம் செய்தார்.