Tamil News Live Updates: செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை எப்போது? - மருத்துவமனை அறிக்கை
இதய நோயால் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடுகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் அனுமதி
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மற்றம் செய்ய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.
நேற்று இரவு உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
பைபாஸ் அறுவை சிகிச்சை எப்போது?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எப்போது பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது பற்றி காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு செந்தில் பாலாஜிக்கு பல்வேறு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
இதய சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையில் மருத்துவர்கள் முதல் கட்டமாக பரிசோதனை செய்திருப்பதாகவும்,
கூடிய விரைவில் பைபாஸ் சிகிச்சை செய்ய மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் குழு பரிந்துரைத்திருப்பதாக மருத்துவமனை தகவல்.
மேலும் தற்போது மயக்கவியல் சிகிச்சை தருவதற்கு செந்தில்பாலாஜி உடல் தகுதியோடு இருக்கிறதா என்ற பரிசோதனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.