ஒரே நாடு ஒரே தேர்தல்.. எப்போது நடைமுறைக்கு வருகிறது? மத்திய அரசு விளக்கம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வருகிறது இன்று மத்திய அரசு விளக்கமளிக்கிறது.
தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 16 முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று(12.12.2024) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இந்த மசோதாவைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் நாளை மறுநாள் மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
எப்போது?
129 ஆவது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவாக இது அறிமுகம் செய்யப்படுகிறது. மசோதா சட்டமாக இயற்றப்பட்டாலும் 2029-ம் ஆண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தான் சட்டம் நடைமுறைக்கு வரும் தேதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி 2034க்கு பிறகு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒரு மசோதாவும், டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான
தேர்தல் சீர்திருத்தத்திற்காக மற்றொரு மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒரே கட்டமாக நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு
தேர்தல் நடத்த அதிக அளவிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்ற காரணத்தால், ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.