வீல் சேர் வழங்க தாமதம் - விமான நிலையத்திலேயே சுண்டு விழுந்து உயிரைவிட்ட பயணி!
விமான நிலையத்தில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீல் சேர் தட்டுப்பாடு
அமெரிக்கா, நியூயார்க்கிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று மும்பைக்கு வந்தது. அதில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பயணித்தார்.
அவரால் நடக்க இயலாத நிலையில் மும்பை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் சக்கர நாற்காலி உதவி கோரினர். அப்போது, சக்கர நாற்காலிகள் மற்றப் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் சிறிது நேரம் காத்திருக்குமாறு விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பயணி உயிரிழப்பு
அதனைத் தொடர்ந்து, இமிகிரேஷன் செயல்முறை கவுன்ட்டருக்கு முதியவர் நடந்து சென்றார். அந்த வேளையில், திடீரென அந்த முதியவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் முதியவர் இறந்துவிட்டார். உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளோம்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்து வருகிறோம். முன்கூட்டியே முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் சக்கர நாற்காலி உதவியை வழங்கும் கொள்கயை நிறுவனம் பின்பற்றுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.