ஏசு காலத்திற்கும் முந்தைய ரொட்டி; இன்றும் கெட்டுபோகாத அதிசயம்! எங்கு கிடைத்தது தெரியுமா?
பல நூறாண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட ரொட்டி துண்டு இன்னும் கெட்டுபோகாத அதிசய நிகழ்வு குறித்து இந்த பதிவில் காணலாம்.
பழமையான ரொட்டி
துருக்கியைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் உலகின் பழமையான ரொட்டியைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஏசு கிறிஸ்துவுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாம். அதாவது, கிமு 6600க்கு முந்தைய காலத்தை சேந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தெற்கு துருக்கி நாட்டில் உள்ள கொன்யா என்ற மாகாணத்தில் அமைந்துள்ள தொல்பொருள் தளமான கேடல்ஹோயுக் என்ற பகுதியில் இந்த பழமையான ரொட்டி கண்டறியப்பட்டுள்ளது.
பழங்கால வீடுகளால் சூழப்பட்ட "மேகன் 66" என்ற பகுதியில், சேதமடைந்த நிலையில் கண்டேடுக்கப்பட்ட "மைக்ரோவேவ் அவன்" அருகே இந்த ரொட்டி எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ரொட்டி வட்டமாய், பஞ்சு போல இருப்பதாகவும் அதனை ஆய்வு செய்தபோது 8,600 ஆண்டுகள் பழமையான, சமைக்கப்படாத, புளிக்கவைக்கப்பட்ட ரொட்டி என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எங்கு கிடைத்தது?
இது குறித்து பேசிய இணைப் பேராசிரியர் அலி உமுட் துர்க்கான், "கேடல்ஹோயுக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரொட்டி தான் உலகின் மிகப் பழமையான ரொட்டி.. அந்த ரொட்டியின் மிகச் சிறிய அளவு மட்டும் இப்போது வரை இருக்கிறது. இந்த ரொட்டியின் நடுப்பாகத்தில் விரல் அழுத்தம் இருக்கிறது.
அந்த ரொட்டி சமைக்கப்படவில்லை. ஆனால் அது புளிக்கவைக்கப்பட்டு, உள்ளே மாவுச்சத்துகள் இருப்பதால் இப்போது வரை நன்றாக இருக்கிறது. இதுநாள் வரை இதுபோன்ற ஒன்றை யாரும் கண்டுபிடித்ததே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை மைக்ரோஸ்கோப் மூலம் ஆய்வு செய்தபோது ரொட்டியில் காற்று இடைவெளி அதிகம் இருந்துள்ளது. மேலும் ஸ்டார்ச் துகள்களும் இருப்பது தெரிந்தது. மாவையும் தண்ணீரையும் இணைத்து செய்து பின், அடுப்புக்கு அருகில் அதைக் கொஞ்ச நாட்கள் அப்படியே வைப்பதே அவர்களது திட்டமாக இருந்துள்ளது.
இது துருக்கிக்கும் உலகிற்கும் ஒரு அறிய கண்டுபிடிப்பாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ரொட்டியின் மேல் களிமண்ணின் மெல்லிய அடுக்கு இருந்ததால் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ரொட்டியை பாதுகாத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.