அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் - அமெரிக்க அதிபரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்க அதிபரின் சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்து பார்க்கலாம்.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர்.
இதற்கான வாக்குப்பதிவு நேற்று(05.11.2024) நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்னிக்கை நடைபெற்றது. வெற்றி பெற 270 இடங்கள் தேவைப்படும் நிலையில் 267 இடங்களில் வெற்றி பெற்று குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வெற்றியை உறுதி செய்துள்ளார்.
சம்பளம்
இதனையடுத்து உரையாற்றிய டிரம்ப், வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்க கடுமையாக உழைப்பேன் என பேசினார். அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா அதிபருக்கான சம்பளம் உள்ளிட்ட பிற சலுகைகள் குறித்து காணலாம். அமெரிக்க அதிபருக்கு ஆண்டுக்கு $4,00,000 (ரூ 3.36 கோடி) சம்பளமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக செலவிற்காக $50,000 (ரூ.42 லட்சம்) கிடைக்கும்.மேலும், $100,000 (ரூ. 84 லட்சம்) வரி செலுத்தாத பயணக் கணக்கு மற்றும் பொழுதுபோக்கு செலவுக்காக $19,000 (ரூ. 16 லட்சம்) பெறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அதிபரின் மொத்த செலவு $5,69,000 (ரூ 4.78 கோடி) ஆகும்.
ஓய்வூதியம்
அத்தோடு அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் இலவசமாக தங்கி கொள்ளலாம். வெள்ளை மாளிகையை அவரின் விருப்பத்திற்கேற்ப அலங்கரிக்க கூடுதலாக $1,00,000 (ரூ. 84 லட்சம்) வழங்கப்படும். மேலும் மேலும் ஏர்ஃபோர்ஸ் ஒன், மரைன் ஒன் மற்றும் கவச லிமோசின்கள் உட்பட பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் உள்ளது.
பதவிக்காலம் முடிந்த பின்னர் ஆண்டுக்கு சுமார் $200,000 (ரூ. 1.68 கோடி) ஓய்வூதியம், சுகாதார பாதுகாப்பு அலுவலக இடம், ஊழியர்களுக்கான நிதி மற்றும் உத்தியோகபூர்வ பயணத்திற்கான கட்டணமும் ஆகியவை வழங்கப்படுகிறது.
மோடியின் சம்பளம்
2001 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அதிபரின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. முதல் அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் வாஷிங்டன்(1788 - 1792) $25,000 ஊதியம் பெற்றார். இது அப்போதைய அமெரிக்கா பட்ஜெட்டில் 2% ஆகும்.
ஆனால் உலக அளவில் அதிக சம்பளம் பெரும் தலைவர்கள் பட்டியலில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முதலிடத்தில் உள்ளார். அவரின் ஆண்டு சம்பளம் $1.69 மில்லியன் (ரூ.14.20 கோடி).
இந்திய பிரதமர் மோடி மாதச் சம்பளமாக ரூ.1.66 லட்சம் பெறுகிறார். இதில் நாடளுமன்ற அலவன்ஸ் ரூ.45,000, செலவு கொடுப்பனவு ரூ.3,000, தினசரி கொடுப்பனவு ரூ.2,000, அடிப்படை ஊதியம் ரூ.50,000 ஆகியவை அடங்கும்.