அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு அதிரடி தடை- சட்டம் நிறைவேற்ற என்ன காரணம்?
டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
டிக் டாக் தடை
உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலிகளில் ஒன்று தான் டிக்டாக். இந்த செயலியின் தலைமை நிறுவனமான "பைட்டான்ஸ்", சீனாவை தலைமையிடமாக கொண்டு வருகிறது.
டிக்டாக் மூலம் பயனர்களின் தரவுகளை எடுத்து கொள்ள சீனா, பைட்டான்ஸ் நிறுவனத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சம் பல நாடுகளுக்கு இருந்து வந்தது. இதையடுத்து, இந்திய உட்பட பல நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன.
என்ன காரணம் ?
அமெரிக்காவில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் இந்த செயலிக்கு தடை விதித்தாலும், நாடு முழுவதும் தடைவிதிக்க கோரி குரல் எழுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது டிக் டாக் செயலியின் தடை தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு ஆதரவு தெரிவித்து 352 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 65 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட பின்னர் இந்த மசோதா சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், `இந்த மசோதா டிக்-டாக் செயலியை தடை செய்யாது எனவும், அதேசமயம் அதன் உரிமையாளரை கட்டுப்படுத்தி மக்களின் தனிநபர் உரிமையை பாதுகாக்க முடியும்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.