ICC-ன் தலைவரான ஜெய்ஷா - மேற்கு வங்க முதல்வர் மம்தா வாழ்த்து! இதை கவனிச்சீங்களா..
ஜெய்ஷா,ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷா
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.இதனைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் மேற்கொண்டது.
அப்போது இரண்டு முறை ஐ.சி.சி. தலைவராக இருந்த கிரெக் பார்க்லே மூன்றாவது முறை போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றபோது பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஐசிசி தலைவராக எந்தவிதப் போட்டியுமின்றி ஜெய்ஷா தேர்வாகியுள்ளார். இதனால் வரும் டிசம்பர்-1 முதல் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்க உள்ளார். 35 வயதில் ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்கப் போகும் இளம் தலைவர் இவர் தான் எனப் பெருமையும் இவர் பெற்றுள்ளார்.
மம்தா பானர்ஜி
இந்த நிலையில் ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷாவிற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து X தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மத்திய உள்துறை அமைச்சரே வாழ்த்துக்கள்!!உங்கள் மகன் அரசியல்வாதி ஆகவில்லை, ஆனால் ஐசிசி தலைவரானார் - பெரும்பாலான அரசியல்வாதிகளை விட மிக முக்கியமான பதவி!! உங்கள் மகன் உண்மையிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவனாக ஆகிவிட்டான், உண்மையில் அவனது இந்த உயர்ந்த சாதனைக்காக நான் உங்களை வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.