"அது வரை " கட்சி கொடி, சின்னம் பயன்படுத்தமாட்டோம் - ஓபிஎஸ் உத்தரவாதம்!!
அடுத்த உத்தரவு வரும் வரை கட்சியின் கோடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் உத்தரவாத அளித்துள்ளது.
அதிமுக விவகாரம்
கட்சியில் இருந்த விதிகளை திருத்தி எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை எதிர்த்து நீதிமன்ற படிகளை ஏறி வருகின்றார் ஓபிஎஸ்.
அதே நேரத்தில் தேர்தலை ஆணையமும் இபிஸை பொதுச்செயலாளராக அங்கீகரித்து அவர்களுக்கு இரட்டை இல்லை சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது. இருப்பினும், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
தடை விதிப்பு
இன்று இந்த வழக்கின் விசாரணையின் போது, இபிஸ் தரப்பில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபிறகும் அதே பதவியை ஓபிஎஸ் பயன்படுத்தி வருகிறார் என்றும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் ஓபிஎஸ் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றார் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய குறுகிய அவகாசத்தை ஓபிஎஸ் தரப்பு கோரிய நிலையில், எத்தனை முறை இப்படி வழக்கு தொடருவீர்கள்? என்றும் நேரம் கேட்பீர்கள்? என்று நீதிபதி சதீஷ்குமார் ஓபிஎஸ் தரப்பினரை வினவினார். மேலும், அதிமுகவின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ் தரப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி சதீஷ்குமார் இம்மாத துவக்கத்தில் உத்தரவிட்டிருந்தார்.
ஓபிஎஸ் உத்தரவாதம்
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஸ் குமாரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது உயர் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றைப் பயன்படுத்தமாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உத்தரவாதம் அளித்தனர். அதனை தொடர்ந்து, உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்குக் கொண்டுவரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி என். சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.