உதயநிதி துணை முதலமைச்சரா..? நடக்காது ஸ்டாலின் அவர்களே! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்ற முயற்சி நிச்சயம் நடக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய இஸ்லாமிய மக்கள் 500 பேர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இனைந்தனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமியர்களுடன் இணைந்து மசூதியில் தொழுகை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 520 வாக்குறுதிகளை செயல்படுத்தி நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்னவென்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் 40 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது.
நிச்சயம் நடக்காது
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அதிமுக மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவதால் மக்களின் சிரமங்கள், துன்பங்கள் அனைத்தும் அறிந்து இருக்கிறது. தற்போது உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்; நிச்சயம் இது நடக்காது.
அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் ஜாதி, மதம், பேதம் கிடையாது; அனைவரும் ஒன்று என்று கருதக்கூடியது. அதிமுகவின் அவைத்தலைவர் ஒரு இஸ்லாமியர் என்று பெருமிதம் தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுகவையே இஸ்லாமிய மக்கள் ஆதரவு தந்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்" என்று அவர் பேசினார்.