வயநாடு நிலச்சரிவில் தமிழர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
வயநாடு நிலச்சரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு தற்போது வரை 107 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் இறங்கியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நிவாரண பணிக்காக தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ 5 கோடி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
நிவாரணம்
இந்த நிலச்சரிவில், வயநாட்டில் கட்டிட வேலை பார்த்து வரும் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த 34 வயதான காளிதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/rdT0Jq2b7M
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 30, 2024
இதில் உயிரிழந்த காளிதாஸுக்கு இரங்கல் தெரிவித்ததோடு அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.