இவ்வளவு நாள் எங்க போனீங்க?, தேர்தல் வந்தால் தான் ஞாபகம் வருமா? - எம்.பி ஜோதிமணியை அலறவிட்ட வாக்காளர்!
கரூர் எம்.பி ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.பி ஜோதிமணி
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எம்.பி ஜோதிமணி. கடந்த 2019-ம் ஆண்டு முதல் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகின்றன.
எம். பி ஜோதிமணி பாரத் ஜோடோ யாத்ரா உள்ளிட்ட கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவதால் பாதி நாட்கள் டெல்லியிலே இருந்து வருகிறார். தற்பொழுது, ஜோதிமணி சுதந்திர தினத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்றார்.
கேள்வி எழுப்பிய வாக்காளர்
இந்நிலையில், கிராம சபா கூட்டத்தில் ஜோதிமணி கலந்துகொண்டு பேசினார். அதன்பிறகு கிராம மக்களை சந்தித்துவிட்டு புறப்படவிருந்த ஜோதிமணியிடம், வாக்காளர் ஒருவர் "நாலரை வருஷமா ஏன் நீங்க எங்க ஊருக்கு வரல. நன்றி சொல்லக் கூட வராத நீங்க இப்ப எதுக்கு வர்ரீங்க, தேர்தல் வரப்போகுது அதனால தான் எங்க ஞாபகம் இப்போ வந்துச்சா?. ஓட்டுக்காக வந்துள்ளீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் சூடான ஜோதிமணி "6,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தாம் நன்றி சொல்ல சென்றிருப்பதாகவும் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருக்கும் உங்களுக்கு பதிலளிக்க முடியாது" என்று கூறிவிட்டு நடையை கட்டினார். அதன்பிறகு காவலர்கள் அந்த வாக்காளரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.