தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கம்? பாஜக 11% வாக்குகளைப் பெற்றது எப்படி?
வாக்காளர் பட்டியலில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல்
பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்துக்கு பிறகு வெளியான பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பாஜக பின்னணியில் இயக்க, தேர்தல் ஆணையம் மிகப் பெரிய மோசடியை அரங்கேற்றி உள்ளதாக கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரவுகளுடன் தெரிவித்தார். இந்நிலையில், சென்னைக்கு வந்த சமூகச் செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்,
”2016 சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.77 கோடி. அடுத்துவந்த 2019 மக்களவைத் தேர்தலில் புதிய வாக்காளர்களையும் சேர்த்து 6.24 கோடியாக வாக்காளர்கள் எண்ணிக்கை இருந்தது.
தமிழகத்திலும் நீக்கம்?
தொடர்ந்து வந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 6.29 கோடியாக அதிகரித்தது. ஆக, சராசரியாக 2016, 2019 ஆண்டுகளில் 40 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
ஆனால், 2021 தேர்தலுக்கும் 2024 தேர்தலுக்கும் இடையிலான எண்ணிக்கையை ஒப்பிடும்போதும், வெறும் 5 லட்சம் வாக்காளர்கள் மட்டும்தான் அதிகரித்துள்ளனர்.
இதன் மூலம் இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள், தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.
எப்படி இப்படி 30 லட்சம் வாக்காளர்கள் மாயமாகிப்போனார்கள்? இதன் பின்னணி என்னவென்பதை தமிழ்நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம் இது!” என கருத்தரங்கம் ஒன்றில் குற்றம்சாட்டியுள்ளார். டீஸ்டா, 2002இல் நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாய் நின்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.