தெருநாயை பாதுகாக்கத்தானே ஓட்டுப் போட்டோம் - நிவேதா பெத்துராஜ்
தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிய வேண்டும் என நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தியுள்ளார்.
தெருநாய் பிரச்சினை
சென்னை எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் தெருநாய்களை பாதுகாக்கக்கோரி ஹெவன் ஃபார் அனிமல்ஸ் என்ற என்ஜிஓ சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது.

இதில் நடிகை நிவேதா பெத்துராஜ், நடன இயக்குநர் ராபர்ட் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் பலர்கலந்துகொண்டனர். பேரணியில் இரண்டு பசு மாடுகளையும் அழைத்து வந்திருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நிவேதா, நம் கண் முன்னால் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை பார்த்து வருகிறோம்.
நிவேதா வலியுறுத்தல்
தெரு நாய்களை வலுக்கட்டாயமாக அகற்றி காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இந்தப் பிரச்சினைக்கு மிகவும் சுலபமான வழியாக இருப்பது தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் போட்டு அவற்றை அதே இடத்தில் மீண்டும் விட்டுவிட வேண்டும்.

தெரு நாய்கள் தொடர்பாக மக்களிடையே அதிகளவில் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாய்கள் மனிதர்களை கடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது, ரேபிஸ் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
அதுகுறித்து மக்களுக்கு அச்சம் ஏற்படுத்துவதைவிட அதற்கு ஒரு தீர்வு கண்டறிவது மேலானது. தெரு நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை. அதற்காகத்தான் வாக்களித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.