இந்த 2 மாநிலங்களில் மட்டும் ஜூன் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை - ஏன் தெரியுமா?
இரு மாநில சட்டமன்றங்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2 நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
2024 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று (01.06.2024) கடைசி கட்ட வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்ட மன்ற தேர்தலும் நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் ஜூன் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு மாநில சட்டமன்ற பதவிக்காலம் ஜுன் 2 அன்றே முடிவடைவதால் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்
60 சட்டமன்ற தொகுதிகளை உடைய அருணாச்சல பிரதேசத்தில் பெமா காண்டு தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இவரே இந்தியாவின் இள வயது முதல்வராவார். இங்கு ஏற்கனவே 10 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடைசி நேரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு 50 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏற்கனவே 10 இடங்களை பெற்று விட்ட பாஜக இன்னும் 20 இடங்களை பிடித்தால் ஆட்சி அமைத்து விடும்.
சிக்கிம் சட்டமன்ற தேர்தல்
32 சட்டமன்ற தொகுதிகளை உடைய சிக்கிமில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு குறைந்தது 17 தொகுதிகளில் வெற்றி பெரறும் கட்சி ஆட்சி அமைக்கும். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி lகட்சிகளுக்கு இடையே தான் இங்கு போட்டி நிலவுகிறது.
இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்க போவது யார் என்பது நாளை (02.06.2024) தெரிந்துவிடும். இந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஜூன் 4ம் தேதியே நடைபெற உள்ளது.