இதனால்தான் ஆஞ்சியோ செய்யவில்லை.. எந்த விசாரணைக்கும் ரெடி - சசிகலா ஆவேசம்

J Jayalalithaa Tamil nadu V. K. Sasikala Death
By Sumathi Oct 19, 2022 05:50 AM GMT
Report

தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் 

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”விசாரணை ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறி, தேவையற்ற அனுமானங்களை கூறி, தம் மீது பழி போட்டிருப்பது எந்த வகையில் நியாயம்.

இதனால்தான் ஆஞ்சியோ செய்யவில்லை.. எந்த விசாரணைக்கும் ரெடி - சசிகலா ஆவேசம் | Vk Sasikala Replies Arumugasamy Commissions Report

மேலும், யாரையோ திருப்திப்படுத்தும் எண்ணத்தில், தேவையற்ற சர்ச்சை கருத்துகளை ஆணையம் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? 2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும் தமக்கும் உறவு சரியில்லை என்பது ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்?

சசிகலா விளக்கம்

இந்த அறிக்கை யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் தாம் ஒருபோதும் தலையிட்டதில்லை. ஜெயலலிதாவுக்கு முதல்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் தம்முடைய நோக்கம்.

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க தாம் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. மேலும், ஆஞ்சியோ சிகிச்சை செய்ய எந்த தேவையும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

என்னையும் அம்மாவையும் எப்படியாவது பிரித்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவே அம்மாவும், நானும் சிறிது காலம் பிரிந்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம். இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் அம்மாவோடு இருந்து வந்தேன்.

என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நாள் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள்,

அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை இனி யாரும் ஆதரிக்கமாட்டார்கள். பொதுமக்களும் அம்மா அவர்கள் மரணத்தில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்'' என தெரிவித்துள்ளார்.