ஒரே போட்டி...சச்சின், சங்கக்கரா சாதனையை நொறுக்கிய விராட் கோலி!!
இன்று மும்பையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் விராட் கோலி இரண்டு மெகா சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா - இலங்கை போட்டி
உலகக்கோப்பையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், பின்னர் கூட்டணி அமைத்த சுப்மன் கில் - விராட் கோலி இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
92 ரன்களை விளாசி சுப்மன் கில் அவுட்டாக, விராட் கோலி 88 ரன்களை எடுத்து வெளியேறினார். தற்போது ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்னிலும், கே.எல்.ராகுல் 7 ரன்களிலும் விளையாடி வருகின்றனர். 33.4 ஓவர்களில் இந்திய அணி 206 ரன்களை குவித்து விளையாடி வருகின்றது.
2 மெகா சாதனைகள்
இந்த போட்டியில், விராட் கோலி இரண்டு மெகா சாதனைகளை படைத்துள்ளார். இப்போட்டியில், 11-வது ஓவரில் 34 ரன்கள் எட்டிய போது விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அரிய சாதனை ஒன்றை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டாவது முறையாக ஒரு ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இந்த சாதனையை ஏழு முறை எடுத்து சச்சின் சாதனையை விராட் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, ஆசியா நாடுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ் விளையாடி 8000 ரன்கள் கடந்த வீரர் என்ற மற்றொரு சாதனையையும் விராட் நிகழ்த்தியுள்ளார்.
159 இன்னிங்ஸ்'ஸில் விராட் கோலி இச்சாதனையை செய்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் சச்சின் 188 இன்னிங்ஸ், சங்ககாரா 213 இன்னிங்ஸ், ஜெய்சூர்யா 254 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.