சச்சினின் 'மோசமான சாதனையை' சமன் செய்தார் விராட் கோலி - ரசிகர்கள் வாழ்த்து!
சச்சின் டெண்டுல்கரின் டக்-அவுட் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.
விராட் கோலி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் சிறப்பாகவே உள்ளது.
இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், உலகக் கோப்பையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதன் காரணமாக இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
மோசமான சாதனை
அந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 9 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கோலி டக்-அவுட் ஆனது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) டாப் 7 இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்களில் முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் (34 டக்) மோசமான சாதனையை விராட் கோலி (34 டக்) சமன் செய்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி 49வது சதத்தை அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்வார் என்று பார்த்தால், அவரின் டக்-அவுட் சாதனையை சமன் செய்துள்ளார் என ரசிகர்கள் விராட் கோலியை கிண்டலடித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.