பாகிஸ்தானை பார்த்து வாயைப் பொத்தி சிரித்த கோலி, ரோஹித் - ஏன் தெரியுமா?
பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங்கை பார்த்த இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி வாயைப் பொத்தி சிரித்தனர்.
இந்தியா - பாகிஸ்தான்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து 120 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் பேட்டிங் செய்துகொண்டிருந்தனர்.
வைரல் வீடியோ
அப்போது ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய 19-வது ஓவரின் ஒரு பந்தை முகமது சிராஜ் தட்டி விட்டு ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது பாகிஸ்தான் ஃபீல்டர் ஒருவர் பந்தை எடுத்து எதிர்முனையை நோக்கி வேகமாக வீசினார்.
ஆனால், யாருமே பந்தை பிடிக்காததால் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் மீண்டும் ஒரு ரன் ஓடினர். அப்போது பந்தை எடுத்து மீண்டும் ரன் அவுட் செய்ய முயற்சி செய்த பாகிஸ்தான் அணி அதிலும் சொதப்பியது.
இதனை பார்த்த இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் சிரித்தனர். அதிலும் விராட் கோலி கைகளை வாயில் வைத்து பொத்திக்கொண்டு அடக்க முடியாமல் சிரித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.