அர்ஜெண்டினாவுக்கு மெஸ்ஸி, இந்தியாவுக்கு அவர்! கப் ஜெயிப்பாரு - இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை!
விராட் கோலி விரைவில் பைனலில் 50வது சதத்தை அடித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்தியா.
ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி ஒரு பக்கம் இந்திய அணியை வெற்றி பாதையில் இழுத்துச் செல்ல, இன்னொரு பக்கம் நட்சத்திர வீரர், விராட் கோலியின் அதிரடியான பேட்டிங்கும் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தடுமாறிய போது 85 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார் விராட் கோலி. இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிராக 95 ரன்கள் குவித்து 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் வெற்றி பெறுவதற்கு உதவினார்.
ஆனால் அந்த போட்டியில் 49வது ஒருநாள் சதத்தை தவறவிட்ட விராட் கோலி விரைவில் அதை அடித்து பைனலில் 50வது சதத்தை அடித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மைக்கேல் வாகன் நம்பிக்கை
இது தொடர்பாக பேசிய அவர் "சேசிங் செய்வதில் விராட் கோலியை தவிர்த்து யாரும் சிறப்பாக இருக்க முடியாது. ஃபைனலுக்கு முன்பாக அவர் 49வது சதத்தையும் ஃபைனலில் 50வது சதத்தையும் அடித்தால் நான் ஆச்சரியப்பட போவதில்லை.
[EFTGE
பொதுவாக மகத்தான வீரர்கள் எப்போதும் உலகக்கோப்பையில் தான் அற்புதமாக செயல்படுவார்கள் என்று நான் சமூக வலைதளங்களில் பதிவிடுவேன். உலக கோப்பையில் தான் மகத்தான வீரர்கள் தங்களுடைய தரத்தை நிரூபிப்பார்கள். எடுத்துக்காட்டாக கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்றதை சொல்லலாம். ஏற்கனவே விராட் கோலி உலகக் கோப்பையை வென்றிருந்தாலும் இம்முறை இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வார் என்று நான் உணர்கிறேன்.
இந்திய அணியை எப்படி நிறுத்த முடியும் என்பதையும் நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் இந்த நிமிடம் அது கடினமாகும். ஏனெனில் பிட்ச்கள் பெரிதாக உதவுவதில்லை. சொல்லப்போனால் சென்னையில் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா எடுத்து அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தனர். ஆனாலும் அதே போல மற்ற அணியினரால் செய்ய முடியுமா என்பது எனக்கு தெரியாது” என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.