ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோஹித் சர்மா - சோகத்தில் இந்திய ரசிகர்கள்
T20 உலக கோப்பை வென்ற பின் விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இறுதிப்போட்டி
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
177 ரன் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புடன் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
2007 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நள்ளிரவு முதல் இந்திய ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஓய்வு
இந்நிலையில் வெற்றி பெற்ற பின் பேசிய, விராட் கோலி சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை போட்டி. உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்று எப்போதும் நான் கனவு கண்டுள்ளேன். அது தற்போது நனவாகியுள்ளது.
இனி இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கான நேரம், டி20 யை அவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என பேசியுள்ளார்.
விராட் கோலி ஓய்வு பெற்றதையடுத்து இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவும் தனது ஓய்வை அறிவித்தார். உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு, அணியின் இரண்டு முன்னணி வீரர்கள் ஓய்வை அறிவித்த செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.