பெற்றோரை இழந்த பெண் - திருமணம், வளைகாப்பு செய்து வைத்த ஊர் மக்கள்!
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு ஊர்மக்கள் ஒன்று கூடி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது பெற்றோர் கொரோனாவால் இறந்து போயினர். இதனையடுத்து தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த சங்கீதா, 12-ம் வகுப்பு முடித்துவிட்டு அங்குள்ள மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்தி வந்தார்.
பெற்றோரை இழந்த அவருக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். பின்னர் கோட்டேரியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.
வளைகாப்பு
இதனையடுத்து இளநிலை பட்ட படிப்பிற்கு தொலைதூர கல்வி திட்டத்தில் விண்ணப்பித்த சங்கீதா அதனை படித்து வருகிறார். இந்நிலையில் அவர் கருவுற்ற தகவலை அறிந்த காட்டுக்கூடலூர் கிராம மக்கள், தாய் வீட்டின் சார்பில் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.
அதற்காக 5 விதமான சாத வகைகள், பலகாரம், பால், பழங்கள் போன்ற சீர் வரிசை பொருட்களுடன் சென்றனர். அங்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவிற்கு தாய் வீட்டின் சார்பில் ஊர்மக்கள் வளைகாப்பு நடத்தினர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.