விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - பாமக சார்பில் சி.அன்புமணி போட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சி.அன்புமணியை வேட்பாளராக அறிவித்துள்ளது பாமக.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஜூன் 14 தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்க்கான கடைசி நாள் ஜூன் 21ம் தேதி என்றும், இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
சி.அன்புமணி
திமுக சார்பில் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதேபோல நாம் தமிழர் சார்பில் வேட்பாளராக மருத்துவர் அபிநயா பொன்னிவளவனை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக மாநில துணை தலைவராக உள்ள சி.அன்புமணி ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டார். 2016 தேர்தலில் 41,428 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார்.