தவெக மாநில மாநாடு; எங்கே எப்பொழுது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
விஜய்யின் தவெக முதல் மாநாடு எங்கு எப்பொழுது நடத்தப்பப்பட உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
ஒரு பக்கம் நடித்து கொண்டிருந்தாலும், விரைவில் நடிப்பை நிறுத்தி விட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது என கட்சி பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
கட்சி கொடி
சமீபத்தில் பனையூரில் உள்ள கட்சி தலைமை தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை வெளியிட்டார். அதன் பின் பேசிய அவர் விரைவில் மாநாடு தேதி அறிவிப்பேன் அங்கு கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படும் என பேசினார்.
கடந்த சில மாதங்ளாகவே மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஈடுபட்டிருந்தார். மதுரை திருச்சி என பல இடங்களில் இடங்களை பார்வையிட்டு வந்தார். லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டிற்கு வருவதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் பார்க்கிங், உணவு சமைக்கும் இடம், கழிப்பறை, குடிநீர், போக்குவரத்து என அனைத்தையும் கருத்தில் கொண்டு பெரிய அளவிலான இடத்தை தேடி வந்தார்கள்.
விக்கிரவாண்டி
இந்நிலையில் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் மாநாடு நடத்தப்பட உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இன்று விக்கிரவாண்டி துணை காவல் கண்காணிப்பாளர் திருமாலிடம் மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
மாநாட்டிற்கு 85 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 1.5 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.