விஜய் மாநாட்டில் நான் பங்கேற்றால் நன்றாக இருக்காது - சீமான் பேச்சு
இடஒதுக்கீடு ஏழை பணக்காரன் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் அவர் பேசியதாவது, "திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம் நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களைப் பார்த்தால் மன்னிப்பு கேட்பவர்கள் போல தெரிகிறதா? செல்போன் ஆடியோவை வெளியிட்ட அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழக மீனவர்கள்
கேரளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் வழக்கம் உள்ளது. அங்கெல்லாம் அம்மாநில மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதில்லை. ஆனால், தமிழக மீனவர்கள் மட்டும் சிறைபிடிக்கப்படுகின்றனர். வாரத்திற்கு தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுகிறார்கள்.
தமிழக மீனவர்கள் சாகும் போது இந்திய அரசு, இலங்கைக்கு எந்த வித நெருக்கடியும் கொடுக்காமல் சகித்துக்கொள்ளுகிறது. குஜராத் மீனவரை சுட்டுக்கொன்ற போது, போர் வரை தயாராகினார்கள். இந்தி பேசுபவன் மட்டுமே இந்தியன், தமிழ் பேசும் நாங்கள் இந்தியன் இல்லையா? மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கொள்கைகளை கடைபிடிக்கும் மத்திய அரசு தமிழக மீனவர்களை பாகுபாட்டுடன் பார்க்கிறது.
மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என கூறுகிறது தமிழக அரசு. மத்திய அரசிடம் கொஞ்சிக் குலாவும் தமிழக அரசு, நிதியைக் கேட்டு வாங்க முடியாதா? நிதி தரவில்லை என பா.ஜ.க உடன் கோபித்துக்கொண்டு இருக்கும் தி.மு.க, கர்நாடகாவில் இருந்து நீர் தரவில்லை என காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வேண்டாம் என ஏன் கோபித்துக்கொண்டு வரவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த போதுதான் காவிரி, முல்லைப் பெரியாறு, கட்சத்தீவு பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. கல்வி, மருத்துவம் மின் உற்பத்தி எல்லாம் பொதுப்பட்டியலுக்கு போய்விட்டது.
விஜய்
முன்னேறிய சாதியினர் முன்னேற்றம் அடைந்த பிறகு அவர்களுக்கு எதற்காக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இட ஒதுக்கீடு ஏழை பணக்காரன் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டதா? அல்லது உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடு காட்டி கல்வி வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் மறுக்கப்பட்ட அதிகாரம் மீண்டும் அவனுக்கு கிடைக்க வேண்டும் என கொண்டுவரப்பட்டதா? படிக்கக் கூடாது, தெருவில் நடக்கக்கூடாது போன்ற கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்குதான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
விஜய் நடந்தும் மாநாட்டில் நான் பங்கேற்பது நன்றாக இருக்காது. தம்பி விஜய் ஒரு அரசியல் இயக்கம் தொடங்குகிறார். அந்த மாநாட்டில் அவர் கோட்பாட்டை பேசுவதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைக்க நிறைய அரசியல் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்" என பேசியுள்ளார்.