ராகுல் காந்தி சொல்லிதான் விஜய் கட்சி ஆரம்பித்தார் - விஜயதாரணி
ராகுல் காந்திதான் விஜயை கட்சி தொடங்க சொன்னார் என விஜயதாரணி பேசியுள்ளார்.
விஜயதாரணி
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி கட்சியில் தனக்கு முக்கிய பதவிகள் தரவில்லை என்ற அதிருப்தி காரணமாக, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவில் இணைந்தார்.
அவருக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்லது விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக சீட் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் வாய்ப்பு தராததோடு, கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்களாகியும் இன்னும் பொறுப்பு எதுவும் கூட வழங்கப்படவில்லை.
கட்சி பொறுப்பு
இந்நிலையில், நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயதாரணி, "நான் இருப்பதையும் விட்டுவிட்டு பாஜகவில் இணைந்தேன். எதிர்பார்ப்போடுதான் பாஜகவுக்கு வந்தேன். ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பதவி கொடுக்கவில்லை" என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியில், காங்கிரசில் கிடைத்த பொறுப்புகளை துறந்து பாஜகவில் இணைந்தேன். எம்எல்ஏ, தேசிய பொதுச்செயலாளர், முதன்மை கொறடா பொறுப்புகளை துறந்தேன். பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் ஒரு மூத்த தலைவர் தனக்கு சீட்டு வேண்டுமென பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும் மன வருத்தம் இன்றி தமிழகம் முழுவதும் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றினேன்.
மற்றபடி, கட்சியில் உழைப்பவர்களுக்கு அடுத்தடுத்த கட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும். இங்கு உழைப்பை கொடுத்தால் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும். எனக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படுகிறது. நிச்சயமாக பாஜகவில் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு கிடைக்கும் என பாஜக தலைவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.
விஜய்
ராகுல் காந்தியை பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சந்தித்தபோது, காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி போன்ற பொறுப்பின் தலைவராக வேண்டுமென விஜய் விருப்பம் தெரிவித்தார். நீங்கள் தமிழகத்தில் அதிக செல்வாக்குள்ள நடிகராக உள்ள நிலையில் தனி கட்சி துவங்கினால் தனி ஆவர்த்தனம் செய்யலாம்’ என்று ராகுல் காந்தி விஜயிடம் கூறினார்.
ராகுல் காந்தி கூறியதன் அடிப்படையில் தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். நான் காங்கிரஸில் இருந்ததால் இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும். ராகுல் காந்தி கூறியதால்தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதால், எதிர்காலத்தில் விஜயின் புதிய கட்சிக்கும் காங்கிரஸுக்கும் நல்ல ஒற்றுமை இருக்கும்" என தெரிவித்துள்ளார்.