இது தான் என் வழி - சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் வேறுபாடுகளை கடந்து - விஜய்யின் உறுதிமொழி
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
நிர்வாகிகள் கூட்டம்
நேற்று வெளியான அறிவிப்பின் படியே கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் இன்று சென்னை பனையூரில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இன்று நிர்வாகிகள் உறுதிமொழி ஒன்றை ஏற்றுக்கொண்டனர். அது குறித்து வெளியான அறிக்கையில், நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
மக்கள் நல சேவகராக....
நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும், நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம் மத நல்லிணக்கம் சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி மதசார்பின்மை சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை கலைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பெங்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.