ஃபாசிச அணுகுமுறைகளை யார் கையிலெடுத்தாலும் எதிர்ப்போம் - விஜய் ஆவேசம்
மும்மொழி கொள்கை திணிப்பது மாநில தன்னாட்சி உரிமையை பறிக்கும் செயல் என விஜய் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை திணிப்பு
மத்திய அரசின் PM Shri திட்டத்தில் இணையாததால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டுக்கான பங்களிப்பாக தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைந்தால் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என தமிழக அரசு இந்த திட்டத்தில் இணைய மறுத்துள்ளது.
விஜய்
இது குறித்து பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களது தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் 3வது மொழியாக இந்தியையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ்நாடு மட்டும் இதனை ஏன் ஏற்க மறுக்கிறது? விதிகளின்படி 3வது மொழியை ஏற்க வேண்டும். அதனை ஏற்கும் வரை விதிகளின்படி, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது என கூறினார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது, ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே" என தெரிவித்துள்ளார்.
விகடன் முடக்கம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு அமெரிக்கா அரசு விமானம் மூலம் இந்தியாவிற்கு நாடு கடத்தியுள்ளது. இந்த செயலுக்கு இந்திய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. தற்போது பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ள நிலையில், இது குறித்தும் எதுவும் பேசவில்லை.
இதை குறிக்கும் விதமாக பிரபல நாளிதழான விகடனில் மோடி டிரம்ப் முன் கைவிலங்கிட்டு அமர்ந்திருப்பது போல் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு விகடன் இணையப்பக்கத்தை முடக்கியதாக கூறப்படுகிறது. இந்த செயலுக்கு பலரும் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஃபாசிச அணுகுமுறை
இது குறித்தும் கருத்து தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், "ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது.
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
— TVK Vijay (@TVKVijayHQ) February 16, 2025
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம்…
பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்" என கூறியுள்ளார்.