தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் விஜய்? நாளை அவசர ஆலோசனை
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக மாநாடு
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
கட்சி கொள்கைகளை அறிவித்ததோடு, கொள்கை எதிரி, அரசியல் எதிரி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசினார். விஜயின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவசர கூட்டம்
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவதற்கான வியூகங்களை விஜய் வகுத்து வருகிறார். திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளில் உள்ள கட்சிகளை இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டம், வட்டம், ஒன்றியம், கிளை வரை பொறுப்பாளர்களை நியமித்து கட்சியை பலப்படுத்த உள்ளார். மாநாட்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதவி வழங்க திட்டமிட்டுள்ளார். வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து தேர்தல் பணியை தொடங்க உள்ளார்.
இந்நிலையில் நாளை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டுமென பொதுச்செயலாளர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
சுற்றுப்பயணம்
இந்த கூட்டத்தில் கட்சிக்கு பொறுப்பாளர்கள் நியமிப்பது, சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து முடித்த உடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
சுற்றுப்பயணத்திற்கென சிறப்பு வசதிகளுடன் கூடிய வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வாகனத்திலேயே அவர் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சுற்றுப்பயணம் டிசம்பர் 27 ஆம் தேதி கோவையில் தொடங்கி, நெல்லையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நாட்கள் தங்கி, மக்கள் சந்திப்பு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம், பொதுமக்கள் கூட்டம், நல உதவி நிகழ்ச்சி, மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு என பிரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டியை போல் நெல்லையில் மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.