சரித்திரத்தின் புதிய திசை...தவெகாவின் வெற்றிக் கொடி நாளை முதல் பறக்கும்- விஜய் அழைப்பு!
தனது கட்சி கொடியேற்றம் நிகழ்வு குறித்து தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
வெற்றிக் கொடி
கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது எனவும், இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் , நடிகருமான விஜய் கொடி ஏற்றவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விஜய் அழைப்பு
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியேற்றம் நிகழ்வு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம்.
அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக்கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து,
நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலைவெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.