இரண்டு தொகுதிகளில் போட்டியிட தவெக தலைவர் விஜய் ஆலோசனை
தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மார்ச் 29-ஆம் திகதி நடைபெற உள்ளது.
தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி நிர்வாகம் சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் மற்றும் தொழிலாளர் சமூகங்கள் அதிகம் உள்ள தொகுதிகளை கவனத்தில் கொண்டு, இரண்டு இடங்களை பரிசீலித்ததாக கூறப்படுகிறது.
பெரம்பூரில் தவெக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டபோது, திருச்சி கிழக்கிலும் அதே தீவிரம் காணப்பட்டது.
ஆனால், சமீபத்தில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணி முடிவுகள் மற்றும் வேட்பாளர் அறிவிப்புகள் வெளிவந்த பின், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது உறுதி செய்யப்படும்.
அதிமுக, பெரம்பூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது. திமுக, பெரம்பூரை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல் தக்கவைத்தால், விஜய் அங்கு எளிதாக வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என கட்சி நிர்வாகம் கருதுகிறது.
தவெக, பெரம்பூரில் வீடு வீடாக பிரசாரம்செய்ய தொடங்கியுள்ளது. விஜய், பெரம்பூர் முதல் விருகம்பாக்கம் வரை பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். திருச்சி கிழக்கில் திமுக பலமான வேட்பாளரை நிறுத்தினால், விஜய் அங்கு போட்டியிடுவதை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.