நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - விஜய் மல்லையாவிற்கு 4 மாத சிறைத் தண்டனை - சுப்ரீம் கோர்ட் அதிரடி

Supreme Court of India
By Nandhini Jul 11, 2022 06:57 AM GMT
Report

விஜய் மல்லையா மோசடி 

விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெங்களூரை சேர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கினார். அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கடந்த 2017ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுகளை மீறி ரூ.300 கோடியை தனது பிள்ளைகளின் வங்கி கணக்குக்கு மல்லையா மாற்றினார். இதனால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரை நேரில் ஆஜர்படுத்த முடியாததால் தண்டனை விவரத்தை அறிவிக்கவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதில், சில சட்ட சிக்கல்களால் தாமதம் ஆவதாக, நீதிமன்றத்தில் கடந்த ஜனவரியில் ஒன்றிய அரசு தெரிவித்தது.

vijay-mallya

தண்டனை வழங்கிய சுப்ரீம் கோர்ட்

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரம் பற்றி அறிவித்திருக்கிறது.

அந்த தண்டனை விவரத்தில் -

40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பரிவர்த்தனையை தனது குடும்ப உறுப்பினர்களான வாரிசுகளுக்கு அவர் மேற்கொண்டிருக்கிறார்.

நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து, நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்கான குற்றத்திற்காக தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனையும் மற்றும் ரூ.2 ஆயிரம் அபராத தொகை செலுத்தும்படியும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இதுதவிர, 4 வாரங்களுக்குள் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகையை வட்டியுடன் அவர் திருப்பி செலுத்தும்படியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. இதை தவறும் பட்சத்தில் அது அவரது சொத்துகள் முடக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.              

எடப்பாடி பழனிசாமியினை அதிமுகவில் இருந்து நீக்குகிறேன் : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி