27ஆம் தேதி தவெக முதல் மாநாடு...27 குழுக்கள் அமைத்த விஜய் ? ரெடியான தொண்டர்கள்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தவெக மாநாடு
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியவர் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்கு என்று அரசியலில் களமிறங்கினார். அதன் பிறகு ஆகஸ்ட் 22 ஆம் தேதி கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார்.
அப்போது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொள்கைகள், அடுத்த கட்ட திட்டம் உள்ளிட்டவற்றை மாநாட்டில் வெளியிடுவதாக விஜய் கூறியிருந்தார். தொடர்ந்து மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்தன.பின்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்காகக் காவல் துறை பல்வேறு நிபந்தனைகளை வித்தது. இதனை ஏற்றுக் கொண்டு மூலம் வரும் 27 ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி வழங்கியது. கடந்த 4 ஆம் தேதி பந்தற்கால் நடும் நிகழ்வுடன் விஜயின் மாநாட்டுப் பணிகள் தொடங்கின. இந்நிலையில், தவெக மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிக்க 27 குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது.
27 குழுக்கள்
அதன்படி, பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரக்குழுவில் 56 பேரும், மாநாட்டிற்கான போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கும் குழுவில் 104 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பாதுகாப்பு மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை பகிர்வுக்குழு, அவசர உதவிக்குழு, சமூக ஊடக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.