2026 தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? மதுரை மாநாட்டில் அறிவித்த விஜய்
2026 தேர்தலில் தவெக மற்றும் திமுகவிற்கும் இடையே தான் போட்டி என விஜய் அறிவித்துள்ளார்.
தவெக மதுரை மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று மதுரை அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற்றது.
இந்த, மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், விஜய்யின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றிய பின்னர், மாலை 4:50 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய விஜய் 5:25 மணி வரை 35 நிமிடங்கள் பேசினார்.
விஜய் பேச்சு
இதில் பேசிய அவர், சினிமாவிலும், அரசியலிலும் நமக்கு ரொம்ப பிடித்தது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப்போல குணம் கொண்ட என் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் உடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர் தான்.
அரசியலுக்கு வரும் முன்பு அவரே வரவில்லை, இவர் எங்கே வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். கட்சிப் பெயர் அறிவித்தபோது, மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்றார்கள். மாநாடு நடத்த முடியாது என்றார்கள். தற்போது, ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் அவ்வளவு சுலபம் கிடையாது என்கிறார்கள்.
நமது கொள்கை எதிரி பாஜக. அரசியல் எதிரி திமுக. 2026 தேர்தலில், தவெக மற்றும் திமுகவிற்கும் இடையே தான் போட்டியே" என பேசினார்.
234 தொகுதிகளிலும் விஜய் வேட்பாளர்
ஒருகட்டத்தில், மாநாட்டில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ், வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப்போகிறேன் என கூறியதும் தொண்டர்கள் ஆர்வமடைந்தனர். முதலில் மதுரை கிழக்கில் விஜய் என கூறியதும் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.
இன்னும் இருக்கு என கூறிவிட்டு மதுரை மேற்கிலும் விஜய், மேலூரிலும் விஜய், திருப்பரங்குன்றத்தில் விஜய், சோழவந்தானிலும் விஜய். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர், 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து வாக்களியுங்கள்.
இந்த முகத்திற்கு வாக்களித்தால் உங்கள் வீட்டில் உள்ள உங்கள் வேட்பாளர் ஜெயித்தது போல். அதே போல் நான் ஒன்று சினிமாவில் மார்க்கெட் இழந்து அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு எல்லாவற்றிற்கும் தயாராகி தான் வந்திருக்கிறோம்." என பேசினார்.