அன்றைக்கு தெரியும் தவெகவின் பலம் - அடுத்த மாநாடு குறித்து அறிவித்த விஜய்
தமிழக வெற்றிக் கழகம் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் கொஞ்சம் கூட சளைத்தது இல்லை என்று அன்னைக்கு தெரியும் என விஜய் பேசியுள்ளார்.
தவெக 2ஆம் ஆண்டு விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று(26.02.2025) செங்கல்பட்டில் உள்ள பூஞ்சேரியில் நடைபெற்றது.
இதில் தவெக தலைவர் விஜய், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
விஜய்
இதில் கடைசியாக உரையாற்றிய தவெக தலைவர் விஜய், "இந்த அரசியலில் மட்டும்தான் வித்தியாசமான ஒன்றை நாம் பார்க்க முடியும். யார் யாரை எதிர்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது. யார் யாரை ஆதரிப்பார்கள் என்றும் சொல்லவே முடியாது. கணிக்கவே முடியாது. ஒரு அரசியல் கட்சியின் பெரிய பலமே கட்டமைப்பு தான்.
ஆலமரம் மாதிரி ஒரு கட்சி பலமாக இருக்க வேண்டும் என்றால், அதன் விழுதுகளும் வேர்களும் பலமாக இருக்க வேண்டும் அல்லவா, அப்படித்தான், இப்போது நாம் கட்சியை பலப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் நம் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் இளைஞர்களாக இருப்பதாக ஒரு கம்பிளைன்ட்.
எளிய மக்களுக்கான கட்சி
அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பிச்ச போதும், எம்ஜிஆர் கட்சி ஆரம்பிச்சபோதும், அவர்கள் பின்னாடி இருந்ததும் இளைஞர்கள் தான். இந்த இளைஞர்களால் தான் 1967, 1977 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இன்னொரு கம்ப்ளைண்ட், என்னவென்றால், நம் கட்சி நிர்வாகிகள் எல்லாரும் எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்களாம்.
நம் கட்சியும் எளிய மக்களுக்கான கட்சி தானே, அப்படி இருக்கும்போது நம் கட்சியை சேர்ந்தவர்களும் எளிமையானவர்களாகதான் இருப்பார்கள். நம்ம கட்சி ஒன்னும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாதுல்ல, முன்னாடி எல்லாம் பண்ணையார்கள் தான் கட்சியில் இருப்பாங்க. இப்போ பதவியில் இருக்கிறவர்கள் எல்லாம் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள்.
பூத் கமிட்டி மாநாடு
இந்த பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டுள்ள பண்ணையாளர்களை அரசியலை விட்டே அகற்றுவது தான் நம்முடைய முதல் வேலை. இதனை ஜனநாயக முறைப்படி செய்வதற்குதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறோம்.
தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி ஏஜென்ட் மிக முக்கியம். தமிழகத்தில் பெரிய பெரிய கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி ஏஜென்ட் வலுவாக இருப்பதாக சொல்வார்கள். நம்முடைய தோழர்களை தான் பூத் ஏஜெண்ட்களாக நியமிக்க போகிறோம். கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போறோம்.
அன்னைக்கு தெரியும், தமிழக வெற்றிக் கழகம் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் கொஞ்சம் கூட சளைத்தது இல்லை என்று அன்னைக்கு தெரியும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டினுடைய முதல் பெரிய சக்தியாக, முதன்மை சக்தியாக, பவர்புல்லாக இருக்கிறது என்று அன்னைக்கு தெரியும்" என பேசினார்.