அரசியல் மாநாட்டுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - அதிரடி முடிவில் விஜய்
தவெக தலைவர் விஜய் நடத்த உள்ள அரசியல் மாநாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
தற்போது கோட் என்னும் படத்தில் நடித்து வரும் நிலையில் இதற்கு அடுத்ததாக ஒரு படம் நடித்த பின் சினிமாவுக்கு ஓய்வளித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்க உள்ளார்.
மாநில மாநாடு
ஒரு பக்கம் நடித்து கொண்டிருந்தாலும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது என கட்சி பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
செப்டம்பர் மாதத்தில் பிரம்மாண்ட மாநில மாநாடு நடத்தி கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை ஆகியவற்றை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு உள்ளது. முதல் மாநாட்டை எங்கு நடத்த உள்ளார் என தொண்டர்கள் மத்தியிலும், மற்ற அரசியல் கட்சிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருச்சி, மதுரை, சேலம், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகள் இந்த பட்டியலில் இருந்தன.
திருச்சி, மதுரை, சேலம் இந்த பகுதிகளில் மாநாடு நடத்துவதற்கான இடத்தை கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடம் பார்த்து வருகிறார். லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பார்க்கிங், உணவு சமைக்கும் இடம், கழிப்பறை, குடிநீர், போக்குவரத்து என அனைத்தையும் கருத்தில் கொண்டு பெரிய அளவிலான இடத்தை தேடி வருகிறார்கள்.
இடம் சிக்கல்
அவ்வாறு சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அதில் சில சிக்கல்கள் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்த உடன் காலையில் இடத்தை தருவதாக சொன்ன நிலத்தின் உரிமையாளர்கள் மாலையில் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி தட்டி கழிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னணியில் பிரபல அரசியல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், விஜயின் மாநாட்டுக்கு இடம் தர வேண்டாம் என நேரடியாகவே சொன்னதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பல்வேறு நெருக்கடி வரலாம் என நில உரிமையாளர்கள்இடம் தர மறுக்கிறார்கள் எனக் கூறியுள்ளனர்.
இந்த விஷயம் விஜய் காதுக்கு எட்டவே சிறிது அப்செட் ஆனாலும், செப்டம்பர் மாதத்தில் 10 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்ட மாநாடு நடத்துவதில் உறுதியாக உள்ளாராம். மாநாடு நடத்துவதற்கான வேலைகளை பாருங்கள், எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என கட்சி நிர்வாகிகளிடம் விஜய் நம்பிக்கை அளித்துள்ளாராம்.