கோவிலுக்கு செருப்பு அணிந்து சென்ற நயன்தாரா - மன்னிப்பு கேட்ட கணவர் விக்னேஷ்..!
திருமணம் முடிந்த மறுநாள் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி திருப்பதி சென்ற நிலையில் அங்கு கோவிலில் செருப்பு அணிந்து போட்டோஷூட் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்புக்கோரி கடிதம் எழுதியுள்ளார்.
திரையுலகம் ஒன்று கூடிய திருமணம்
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
மேலும் திருமணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர் ஒரு லட்சம் பேருக்கு உணவளித்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் பயண தூரம், விஐபி பாதுகாப்பு போன்ற காரணங்களால் தேவஸ்தானம் அனுமதி மறுத்ததால் பின் மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் நயன்தாரா மஞ்சள் நிற புடவையிலும், விக்னேஷ்சிவன் பட்டு வேஷ்டி, பட்டுசட்டையிலும் கோவிலுக்கு வந்த நிலையில் இவர்களது வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
திருப்பதிக்கு வந்திருந்த பக்தர்களில் சிலர் இந்த தம்பதியினரை பார்க்க குவிந்ததால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருப்பதி மாட வீதிகளில் இந்த ஜோடி போட்டோஷூட் நடத்தினர்.
செருப்பு அணிந்த சர்ச்சை
அப்போது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் செருப்பு கால்களுடன் சென்றது சர்ச்சையை கிளப்பியது. பலரும் இது தொடர்பான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய தொடங்கினர்.
கோவில் முன்பு போட்டோஷூட் நடத்தியது, செருப்பு அணிந்திருத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கண்காணிக்க தவறியது போன்றவை குறித்து திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
மன்னிபு கேட்ட விக்னேஷ் சிவன்
இந்நிலையில் திருப்பதி சம்பவம் குறித்து விளக்கம் தெரிவித்து விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்களுடைய திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் நடந்ததாகவும் கூறியுள்ளார்.
Exclusive! #Nayanthara & #VigneshShivan's Thirupati Visit Photos ❤️ 1/n#VigneshShivanNayanthara #WikkiNayan #Nayan #VigneshShivanMarriage pic.twitter.com/5QuFGYqC0G
— Happy Sharing By Dks (@Dksview) June 10, 2022
திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு கூட செல்லாமல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வந்தோம். மக்கள் கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோவில் வளாகத்தை விட்டு வெளியேறிய போதும், போட்டோ எடுக்கும் போது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை.
நாங்கள் இருவரும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து கோயில்களுக்கு செல்லும் தம்பதிகள் எனவும், , கடந்த 30 நாட்களில் கிட்டத்தட்ட 5 முறை திருப்பதிக்கு சென்று திருமணத்தை அங்கே நடத்த முயற்சித்தோம் மேலும் தாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை.
இதனால் புண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.