அரசு சொத்தை விலைக்கு கேட்டது உண்மையா? விக்னேஷ் சிவன் விளக்கம்!
அரசு ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக தகவல் வெளியாகியது.
விக்னேஷ் சிவன்
போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். மேலும், பல ஹிட் படங்களையும் இயக்கியுள்ளார். பிரபல நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த சூழலில், புதுச்சேரிக்கு சென்ற விக்னேஷ் சிவன், புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து ஹோட்டல் தொழில் ஆரம்பிப்பது தொடர்பாக பேசினாராம்.
அப்போது புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் இயங்கி வரும் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் ஹோட்டலை விலைக்கு கேட்டாராம். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், அது அரசு ஹோட்டல் அதை விற்க முடியாது என கூறியுள்ளார்.
அப்படியானால் சீகல்ஸ் ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என விக்னேஷ் சிவன் கேட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
விளக்கம்
“புதுச்சேரி அரசுக்குச் சொந்தமான உணவகத்தை விலைக்கு கேட்டதாக பரவி வரும் செய்திகளுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். எனது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) படத்திற்காக புதுச்சேரி விமான நிலையத்தை பார்க்கவும் அங்கு படப்பிடிப்பை நடத்த அனுமதி கோரவும் சென்றேன்.
மேலும், மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை காணச் சென்றேன். அப்போது என்னுடன் வந்த மேலாளர் அமைச்சருடன் உணவகத்தை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அது தவறுதலாக என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார். மேலும், இது தொடர்பாக வெளியான மீம்ஸ்கள் வேடிக்கையாக இருந்ததாகவும் அதேநேரம் தேவையற்றது என்றும் விக்னேஷ் சிவன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.