வெற்றி துரைசாமி எனக்கு அத செய்யலனா.. ஏத்துக்க முடியாத இழப்பு - மேடையில் அழுத வெற்றிமாறன்!
வெற்றி துரைசாமியின் மறைவு குறித்து கண்கலங்கியபடி பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
இரங்கல் கூட்டம்
சென்னை மாநகராட்சி அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது தந்தையின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை மேலாண்மை செய்து கொண்டிருந்தார்.
பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் 'என்றாவது ஒரு நாள்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்நிலையில் தனது அடுத்த படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக சிம்லா சென்றுவிட்டுத் திரும்பியபோது, இவரின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மாயமான வெற்றி துரைசாமி 8 நாட்கள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து அவரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் வெற்றி துரைசாமியுடன் நட்பில் இருந்த இயக்குநர் வெற்றிமாறன், தனது 'IIFC' கல்வி நிறுவனத்தின் சார்பாக இரங்கல் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அப்போது பேசிய வெற்றிமாறன் "வெற்றி துரைசாமி என்னிடம் தான் சினிமா கொற்றுக்கொண்டதாக சொல்வார். ஆனால், உண்மையில் அவர்தான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார். நல்ல வைல்ட் லைஃப் போட்டோகிராபர். அதில் நிறைய விருதுகளையும் வாங்கியுள்ளார்.
வெற்றிமாறன் உருக்கம்
பனிச்சிறுத்தையை போட்டோ எடுக்கச் சென்று உயிரிழந்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக நான் செய்த பணிகள் அனைத்திலும் அவரது பங்கு ஏதோவொரு விதத்தில் இருந்திருக்கிறது.
நாங்கள் 'IIFC' ஆரம்பிக்கலாம் என்று நினைத்தபோது, அதற்கு இடம் கொடுத்தார். அவர் அதைச் செய்யவில்லை என்றால் இந்த 'IIFC' கல்வி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு நீண்ட காலமாகியிருக்கும். இன்னொருவர் கனவுக்காக வேலை பார்ப்பதற்கு யாருக்கும் அவ்வளவு எளிதாக மனம் வராது. எப்போதும் உதவி செய்யும் பழக்கம் கொண்டவர்களுக்கு மட்டுமே இப்படியான மனம் இருக்கும்.
எப்போதும் சிரித்த முகத்துடனே எல்லோரிடமும் பழகுபவர். மனிதர்களிடம் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருப்பவர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத பெரிய இழப்பு. காலம், இந்த மாதிரியான கடினமான சூழ்நிலைகளுக்கு நம்மை ஆளாக்கிக்கொண்டே இருக்கிறது.
வாழ்க்கையில் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறோம், கடந்து செல்கிறோம், இழக்கிறோம், பெறுகிறோம். ஆனால், அதில் ஒரு சிலரின் இழப்புதான் நம்மில் கொஞ்சத்தை எடுத்துச் சென்றுவிடுகிறது. அப்படியான மறைவுதான் வெற்றி துரைசாமியின் மறைவு எனக்கு" என்று தழுதழுத்தக் குரலில் பேசினார்.