வெற்றி துரைசாமியின் நிலை? நதியில் மூளை திசுக்கள் - டிஎன்ஏ பரிசோதனை தீவிரம்!
வெற்றி துரைசாமி நிலை குறித்த கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.
வெற்றி துரைசாமி
இமாச்சலப் பிரதேசம், சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி,
அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் காரில் பயணம் செய்தனர். அந்த கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. இதில், வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டி.என்.ஏ பரிசோதனை
கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 6 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் 7 வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், அவரைப் போல எடை மற்றும் உயரம் கொண்ட மாதிரி (DEMO) பொம்மையை ஆற்றில் வீசி, விபத்து நடந்தபின் வெற்றி துரைசாமி எவ்வழியாக நதியில் சென்றிருப்பார் என மீட்புக் குழுவினர் சோதனை நிகழ்த்தி அவரைக் கணடறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், நதியின் கரையோரம் உள்ள பாறை இடுக்குகளில் இருந்து மூளையின் திசுக்கள் கண்டெடுக்கப்பட்டன. ரத்தமாதிரியும் எடுக்கப்பட்டது. அதனை போலீசார் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த முடிவுகள் நாளை வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தன் மகனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக சைதை துரைசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.