கட்டைப்பையில் வைத்து குழந்தையை கடத்திய பெண் - 24 மணி நேரத்தில் போலீசார் செய்த சம்பவம்
பிறந்து 3 நாளே ஆன குழந்தையை பெண் ஒருவர் கட்டப்ப்பையில் வைத்து கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் குழந்தை
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு அருகே உள்ள அரவட்லா மலைக் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தன் மற்றும் சின்னு. கடந்த ஜூலை 27 ம் தேதி இரவு பிரசவத்துக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சின்னு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னுவுக்கு மறுநாள் அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, குழந்தை நல வார்டுக்கு குழந்தையுடன் சின்னு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் சின்னுவின் கணவர் உணவு வாங்கி வந்து கொடுத்துவிட்டு, வெளியே சென்றுள்ளார்.
கைது
அப்பொழுது, அறிமுகமில்லாத பெண் ஒருவர் குழந்தையை பார்த்து கொள்வதாக பேச்சுக்கொடுத்துள்ளார். சின்னு சப்ப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற போது அந்த பெண் குழந்தையுடன் மாயமாகியுள்ளார். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு தலைமையிலான காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்துக்குரிய வகையில் பெண் ஒருவர் கட்டைப்பை வைத்து சிறுவனுடன் வேகமாக மருத்துவமனை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த பெண் கொண்டு சென்ற பையில்தான் குழந்தையும் இருந்தது என உறுதி செய்த காவல் துறையினர், டி.எஸ்.பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடினர். 24 மணி நேரத்திற்க்குள், கர்நாடக மாநிலம், சிக்மகளூர் அருகே அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் குழந்தையை மீட்டனர்.
RFID தொழில்நுட்பம்
கடத்தலுக்கு உதவியதாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் வேலூரை சேர்ந்தவர் என்றும், சிக்மகளூரில் ஒரு வீட்டில் வேலைப் பார்ப்பதாகவும், வீட்டு உரிமையாளருக்கு குழந்தை இல்லாததால் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. கடத்தல் கும்பலை வேலூருக்கு அழைத்து வந்து அடுத்த கட்ட விசாரணை நடத்த உள்ளனர் காவல் துறையினர்.
இது குறித்து விளக்கமளித்த வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், "குழந்தை கடத்தலை தடுக்க மருத்துவமனையில் RFID தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தக் குழந்தையின் கையில் இருந்த டேகை பெற்றோர் கழற்றி கீழே வைத்துள்ளனர். அதனால் குழந்தை வெளியே செல்லும் போது எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை. இருந்த போதும் பணியில் கவனக்குறைவாக இருந்த காவலாளி மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். பிரசவ வார்டில் தீவிர கண்காணிப்பு மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளோம்" என கூறியுள்ளது.