தலைமைக்கு கிடைத்த ரிப்போர்ட்; மீண்டும் களமிறங்கிய கதிர் ஆனந்த் - பின்னணி என்ன!
திமுக சார்பில் தேர்தலில் கதிர் ஆனந்த் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
கதிர் ஆனந்த்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் மனுத் தாக்கல் தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வேலூரில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கதிர் ஆன்ந்த், இரண்டாவது முறையாக அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், இருவரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவை பொறுத்தவரை தற்போதைய மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இதனால், கட்சி பணிகளில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்த அவருக்குத்தான் மீண்டும் வாய்ப்பு என்றதும் கதிர்ஆனந்த் தரப்பினர் உற்சாகத்துடன் அடுத் தக்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
கள நிலவரம்
வேட்பாளர்களின் தகுதி மற்றும் கள நிலவரங்களை ஆராய்ந்து தான் வேட்பாளர்களை தேர்வு செய்து உள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, செயல்பாட்டின் அடிப்படையில், எம்பி தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு, சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது முதல்.. வேலூர் ஏர்போர்ட் செயல்பாட்டுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் கதிர் ஆன்ந்த் குரல் எழுப்பியது மறுக்கமுடியாத உண்மை.
அனைத்து பிரச்சனைகளுக்கும் நேரில் செல்ல முடியாவிட்டாலும், மக்களுக்கு தேவையான விஷயத்தை உடனே செய்யுமாறு கூறி வலியுறுத்தி ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக, வந்தே பாரத் ரயில் காட்பாடியில் நிற்க வேண்டும் என ரயில்வே அதிகாரியுடன் விவாதம் செய்து அங்கு நின்று செல்ல வழிவகை செய்துள்ளார்.
தேர்தல் வியூகம்
திமுகவில் நிலவி வந்த கோஷ்டி மோதலை மறந்து நிர்வாகிகள் பலர் கதிர் ஆனந்துக்கு சால்வை அணிவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அவர் செல்ல முடியாத சில தொகுதிகளுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். எதிர்ப்பாளர்களையும் மனம் விட்டு சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறோம். இந்த தேர்தலில் எங்கள் வியூகம் வேறு விதமாக இருக்கும்.
சிறு பான்மையினர் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் திமுகவுக்கு கொண்டு சேர்க்க பாடுபடுவோம் என கதிர் ஆனந்த்துக்காக தேர்தல் வேலை களில் தீவிரம் காட்டி வரும் திமுக முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மகனை வெற்றிபெற வைக்கும் முயற்சியில் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டிருக்கும் அமைச்சர் துரைமுருகன், தொகுதியில் வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கும் வன்னியர், இஸ்லாமியர், பட்டியல் சமுகத்தினரின் வாக்குகளைக் குறிவைத்து காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்.
திமுகவும், பாஜகவும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கிய நிலையில், அதிமுக தற்போது தான் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் டாக்டர் பசுபதி களமிறங்கவுள்ளார்.
ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் அதிகம் இஸ்லாம் மக்கள் வாழ்ந்து வருவதால், அவர்கள் ஒட்டு எப்போதும் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக களநிலவரம் தெரிவிக்கிறது.