சென்னையின்15 ஆண்டு காத்திருப்பு.. வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை எப்போது தொடக்கம்?
வேளச்சேரி - பரங்கிமலை ரயில் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் சேவை
சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு டிராபிக் ஒரு பெரிய தலைவலியாக இருக்கும். இதுபோன்ற போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் விரைவாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல வசதியாக பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ந்து இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்டம் கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இந்த பணியை முடிப்பது எளிதாக அமையவில்லை.
ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால், பல ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்டது. பிறகு ஏராளமான சவால்களுக்கு நடுவே நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு முதல் பணிகள் துவங்கியது.
எப்போது தொடக்கம்?
வேளச்சேரி - பரங்கிமலை 5 கி.மீ., துாரம் இணைக்கும் வகையில் மேம்பால ரயில் பாதை திட்டப்பணி தொடங்கியது. பெரிய தூண்களும் அமைக்கப்பட்டது. அப்போது, பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதையடுத்து, சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்தனர்.
தூண்களின் வலிமை தன்மையை ஆராய்ந்த பிறகு மீண்டும் பணி தொடங்கியது. இப்படி பல்வேறு சவால்களை தாண்டி 15 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் பணியில், மேம்பாலம் இணைப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
தற்போது ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதனால். அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் வேளச்சேரி - பரங்கிமலை இடையே ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.