எல்.முருகனின் விஷமத்தை விட இவரின் கருத்து ஆபத்து - ஆதரவளித்த சீமானை தாக்கும் விசிக

Thol. Thirumavalavan Tamil nadu BJP Seeman
By Karthikraja Oct 22, 2024 07:26 AM GMT
Report

அருந்ததியர்களை தமிழர்கள் அல்ல என வகைப்படுத்துவதை கடந்து போக முடியாது என விசிக சட்டமன்ற தலைவர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் பேச்சு

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் திருமாவளவனின் முதல்வர் கனவு ஒரு போதும் நிறைவேறாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியிருந்தார். 

சீமான்

எல்.முருகனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "திருமாவளவன் முதலமைச்சராக வரகூடாது என கூறுவதற்கு எல்.முருகன் யார்? எல் முருகன் மட்டும் 2 முறை மத்திய அமைச்சர் ஆகலாமா? தமிழர் நிலத்தில் தமிழர் திருமாவளவன் முதல்வர் ஆக கூடாதா? இதற்காக எப்படியாவது திருமாவளவனை முதல்வராக்குவோம்" என பேசியிருந்தார். 

திருமாவளவனை எப்படியாவது முதல்வராக்குவோம் - சீமான்

திருமாவளவனை எப்படியாவது முதல்வராக்குவோம் - சீமான்

சிந்தனை செல்வன்

இந்நிலையில் இவர்களின் பேச்சுகளை கவனமாக அணுக வேண்டும் என விசிக சட்டமன்ற தலைவர் சிந்தனை செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "எல் முருகன் அவர்கள் பேசுவது விமர்சனம் அல்ல. அப்பட்டமான பொய்கள் நிரம்பிய அவதூறு. பட்டியல் சமூகத்தினரின் அகில இந்திய அளவிலான அரசியல் திரட்சியை கண்டு கதிகலங்கியுள்ள பாஜக சங்பரிவார கும்பல் அதை உடைத்து சிதைத்திட தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சிந்தனைச்செல்வன்

அந்த சதிச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டியல் சமூகத்தினரை கூறு போட்டு குறுக்குச் சுவர் எழுப்புகிற முழு உரிமையும் மாநிலங்களுக்கு அது அளித்துள்ளது. இந்த முயற்சி பட்டியல் சமூகங்களுக்குள் இருக்கிற நலிந்த பிரிவினரை மேம்படுத்துவதற்கு செய்யப்பட்ட ஏற்பாட்டை போல தோற்றமளிக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் உண்மையில் அதுவல்ல, மாறாக பட்டியல் சமூகத்தின் ஒற்றுமையை திரட்சியை சிதறடிப்பது தான் என்பதை மிகத் துல்லியமாக எழுச்சித்தமிழர் அம்பலப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் உரிய தரவுகளின் அடிப்படையில் நல்ல நோக்கத்தோடு அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை கலைஞர் அவர்கள் கொண்டு வந்தபோது சட்டமன்றத்தில் தலித் மக்களின் பிரதிநிதியாக இருந்த ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே.

அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு

திராவிட முன்னேற்றக் கழகத்தோடு மிகுந்த தோழமையோடு தலைவர் எழுச்சித்தமிழர் விளங்கினார், எழுச்சித்தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்களின் மனம் நிறைந்த ஆதரவு இருந்ததால் தான் தமிழகத்தில் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதை யாரும் மறுத்து விட முடியாது.

மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துவரும பாஜக அரசு, பட்டியல் சமூகங்களுக்குள் குறுக்கு சுவர்களை எழுப்பி நிரந்தரமாக சிறுசிறு அடைப்புகளுக்குள் சிதறடித்து விடுகிற உரிமையை மட்டும் மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. அதைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறோம். அருந்ததியர்கள் உரிமையில் விடுதலை சிறுத்தைகள் கொண்டிருக்கிற அக்கறையும் கவனமும் வெறும் தேர்தல் வாக்கு அரசியலுக்கானது அல்ல, அது சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை எனும் கொள்கை சார்ந்தது.

சிந்தனைச்செல்வன்

விடுதலைச்சிறுத்தைகளை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமான கட்சி என குறுக்க முனையும் பாஜக எல்.முருகனின் அவதூறுகளும் அபாண்டங்களும் ஒருபோதும் மக்களிடத்தில் எடுபடாது. எல்.முருகனால் சாதி ஒழிக என உதட்டளவிலாவது சொல்ல முடியுமா? சாதி மறுப்பு திருமணங்கள் குறித்தும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் தமிழக அரசின் முன்னெடுப்பு குறித்தும் அவரது கட்சியின் கருத்தை அவரால் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்த இயலுமா என்பது போன்ற ஆயிரம் கேள்விகளை அவர் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

சீமானின் கருத்து ஆபத்தானது

இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்கள் எல்.முருகன் அவர்களை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அவரது அன்பிற்கு நன்றி சொல்கிற அதே தருணத்தில் விடுதலைச்சிறுத்தைகளை ஆதரிப்பதற்காக ஒட்டுமொத்த அருந்ததிய சமூகத்தையும் தமிழர் அல்லாதவர்கள் என மொழிவழி தேசிய பார்வை கொண்டு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

பாஜக எல்.முருகன் தெரிவித்த கருத்தை ஒரு அடிமை சங்கியின் தனிப்பட்ட தாக்குதலாக கடந்து செல்லலாம். ஆனால் எங்களை ஆதரிப்பதாக சொல்லி வெளிப்படும் சீமானின் கருத்து ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. வரட்டுத்தனமான மொழிவழி தேசிய பார்வையின் அடிப்படையில் அருந்ததியர்களை தமிழர்கள் அல்ல என வகைப்படுத்துவதை ஒருபோதும் எளிதாக கடந்து போக முடியாது. 

அவர்கள் இந்த மண்ணின் குடிகள் அருந்ததியர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஒரு அங்கம். சாதி அடையாளத்துடன் அவர்களை பிரிக்கும் எல் முருகனின் குரலைப்போலவே மொழி அடிப்படையில் எங்கள் உறவுகளை அந்நியர்களாக்குவதை ஒருபோதும் ஏற்க இயலாது. எங்கள் மீது உட்சாதி அவதூறுகளை அள்ளி தெளிக்கிற எல்.முருகனின் விஷமத்தை விட, எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக இனவாத அடிப்படையில் உழைக்கும் அருந்ததிய மக்களை மொழியால் பிரிக்கும் சீமானின் கருத்து ஆபத்தானது" என தெரிவித்துள்ளார்.